Avant Garde சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளையும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (23) விடுதலை செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி வழங்கிய தீர்ப்புக்கு அமைய பிரதம நீதவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, 8 சந்தேகநபர்களுக்கும் எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வதில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு எவ்விதத் தடையும் இல்லை என சுட்டிக்காட்டிய பிரதம நீதவான், குறித்த 8 சந்தேகநபர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ, சோமதிலக திசாநாயக்க, ஜயரத்ன பெரேரா, சிசிர குமார கொலம்பகே ஆகிய 4 சந்தேகநபர்கள் மாத்திரம் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமனறத்தில் ஆஜராகியிருந்தனர்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத ஏனைய 4 சந்தேகநபர்களுக்கும் குறித்த தீர்ப்பு குறித்து அறிவிப்பதற்கான பொறுப்பை அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஏற்றுள்ளனர்.
எவ்வாறாயினும், வழக்கின் 8ஆவது சந்தேகநபரான நீதி அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவி செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் அவரைக் கைது செய்யுமாறு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மன்றில் ஆஜரானால் பிடியாணை நீக்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் செல்வதற்காக Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கருத்து தெரிவிக்க