உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பாலித தெவரப்பெரும செயற்பாடானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – இராதா

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாடு சட்ட ரீதியாக பிழை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும், அதேநேரத்தில் மனிதாபிமான ரீதியாக அவரின் செயற்பாட்டை வரவேற்கிறோம்.

தொழிலாளர்களின் உண்மையான உணர்வை புரிந்து கொண்டு செயற்படுவது வரவேற்க கூடியது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டன் ஸ்டிரதன் தோட்டத்தில் 16.09.2019 அன்று தனி வீட்டு திட்டத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் திரு உருவ சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ்? முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் என கட்சி முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டிற்காக பல வருடங்களாக உழைத்தாலும், அவர்களில் அவர்கள் உயிரிழந்த பின்பு இறுதி கிரியைகளை செய்வதற்கு இடம் வழங்கப்படாமையானது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அண்மையில் களுத்துறை மத்துகமவில் இடம்பெற்ற சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எடுத்த முயற்சி சட்ட ரீதியாக பிழையாக இருந்தாலும் மனிதாபிமான ரீதியில் அதனை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இன்று அவருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் அகிம்சை வழிகளிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த செயலாகவே இதனை கருதுகின்றார்கள்.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை.

ஒரு மனிதன் வாழ்ந்து மறையும் போது அவனுக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதையை கூட வழங்குவதற்கு இந்த தோட்ட கம்பனிகள் முன்வருவதில்லை.

இதற்கு முழுமையாக தங்களுடைய வருமானத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றார்கள்.

எனவே இது போல இன்னும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தொழிலாளர்கள் சார்பாக அணைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

பாலித தெவரப்பெரும செயற்பாடானது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்து காட்டாகும் என்றார்.

 

கருத்து தெரிவிக்க