தமிழர் என்ற இனரீதியான பற்று இருந்தால் எழுக தமிழ் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.
“எழுக தமிழ்” நிகழ்வு நடைபெறவுள்ள எதிர்வரும் 16 ஆம் திகதி அன்று கடையடைப்பை மேற்கொள்ளுமாறு விடுக்கபட்ட கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தினரால் இன்றையதினம் (14.09) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வர்த்தகர் நலன்புரி சங்கத்தினர், தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், வவுனியா நகரசபை தலைவர் ஆகியோரிற்கு இடையில் இன்றையதினம் மாலை 7 மணியளவில் வவுனியா நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள தவிசாளர் அலுவலகத்தில் அவசரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நகரசபை தலைவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவித்த அவர்,
“எழுக தமிழ்” நிகழ்வானது உலக நாடுகள் மத்தியில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. தமிழரான எமக்கு இடம்பெற்ற இனப்படு கொலைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, காணாமல் போனோர் பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்களை முன் வைத்தே இது ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
பேரணிக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் மற்றும் வர்த்தகர் நலன்புரிச்சங்கங்களின் ஆதரவை நாம் கோரியிருந்தோம். வர்த்தகர் சங்கம் எமக்கு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
வர்த்தகர் நலன்புரி சங்கமானது எமக்கு எதிரான அறிக்கையொன்றினை இன்று காலை வெளியிட்டிருந்தனர்.
குறித்த அறிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலேயே முன்னாள் முதலைமச்சரின் பெயர் பாவிக்கபட்டுள்ளது.
இது தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான, உரிமைகளை கேட்பதற்கான ஒரு பேரணியாக நடக்க உள்ளதே தவிர விக்கினேஸ்வரன் என்ற தனிப்பட்ட ஒருவருக்காக நடாத்தபடவில்லை.
தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் இணைத்துகொண்டு செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.
எனினும் நாளைய தினம் (15.09) காலை 9 மணிக்குள் தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக வர்த்தகர் நலன் புரிசங்கத்தினர் எமக்கு கூறியுள்ளனர்.
தமிழர் என்ற இனரீதியான பற்று இருந்தால் அதனை தர வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கிறது என்றார்.
கருத்து தெரிவிக்க