இலங்கைக்கு வருகை தந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் நேற்று(10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே பாராளுமன்ற தொடர்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சவுதி அரேபியாவின் சபாநாயகர் தெரிவித்த்துடன், இதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பினை பல துறைகளில் விரிவுபடுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சவுதி அரேபிய நிதியத்தினூடாக இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக ஜனாதிபதி பாராட்டு தெரிவித்ததுடன், எதிர்வரும் காலங்களில் அதிகளவிலானோர் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அந்நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியின் வேண்டுகோளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக சவுதி அரேபிய சபாநாயகர் தெரிவித்தார்.
சுமார் 136,000 இலங்கையர்கள் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றும் அதேவேளை, அவர்களது வினைத்திறனான சேவையை பாராட்டியதுடன், மேலும் அதிகளவிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தமது அரசாங்கம் கவனம் செலுத்துவதாக சவுதி அரேபிய சபாநாயகர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் இலங்கையைப் போன்றே சவுதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனவும் பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டது அல்ல என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
[ அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க