பிரியா – நடேசலிங்கம் குடும்பம் நாடு கடத்தப்பட்டால் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப வருவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களது வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், முழுமையான ஒரு விசாரணையை நடத்த கால அவகாசம் தேவை என்று காரணம் காட்டி, வழக்கை 12 நாட்கள் ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
நீதிமன்றத்தின் விசாரணை முடிவிற்காக, பிரியா நடேசலிங்கம் குடும்பம் காத்திருக்கையில், Labor கட்சியும் அகதிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஆதரவாளர்களும் இந்த குடும்பத்தை நாடு கடத்தக் கூடாது என்று குரல் கொடுக்கும் வேளையில் உள்துறை அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடேசலிங்கம் முருகப்பன் 2012 ஆம் ஆண்டும், அவரது மனைவி கோகிலபத்மபிரியா நடராசா 2013 ஆம் ஆண்டும் இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து புகலிடம் கோரினார்கள்.
அவர்களது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் கிராமப்புற நகரமான பிலோயெலாவில் இடைக்கால வீசாவில் வசித்து வந்தார்கள்.
கடந்த ஆண்டு இந்த வீசா காலாவதியானது. ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்கள்.
இந்தக் குடும்பத்தினரை இலங்கைக்குத் திரும்பி, மீண்டும் விண்ணப்பிக்குமாறு பிரதமர் Scott Morrison அழைப்பு விட்டிருந்தார்.
நேற்று, உள்துறை அமைச்சர் அவர்கள் அப்படி விண்ணப்பிக்க முடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
“வீசாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், வெளி நாட்டிலுள்ள எவரும் குறிப்பிட்ட வீசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம்.
எனவே, யார் எந்த வீசாவிற்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது,” என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
“வழக்கமான விண்ணப்ப பரிசீலனைகள் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்த குடும்பமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல, நாட்டுக்கு வெளியிலிருந்து விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர்கள்.”
இந்தக் குடும்பத்தின் வழக்கில் உள்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று Labor கட்சி அழுத்தம் கொடுக்கிறது.
முன்னர் 4,000 வழக்குகளில் அமைச்சர் தலையிட்டிருக்கிறார் என்று Labor கட்சித் தலைவர் Anthony Albanese சுட்டிக் காட்டினார்.
ஆனால், அவருக்கு உண்மை தெரியாது என்று, உள்துறை அமைச்சர் நிராகரித்தார். “கடந்த 24 மணி நேரத்தில் அவர் கூறிய சில கருத்துகளைக் கேட்கும் போது – ஆயிரக்கணக்கான வழக்குகள் தலையிட்டிருப்பதாக அவர் கூறும் போது, அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது என்பது புலனாகிறது,” என்று பீட்டர் டட்டன் கூறினார்.
“மாறி மாறி பேசும் ஒருவர் எப்படி இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு முயற்சி செய்ய முடியும்? எப்படி பிரதமராக முடியும்? படகுகளை நிறுத்துவோம் என்கிறார், அதே மூச்சில் Labor கட்சி 6,000 அகதிகளை உள்வாங்கும் என்கிறார்.”
படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று Anthony Albanese பலமுறை கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு, Kevin Ruddஇன் துணைப் பிரதமராக இருந்தபோது குடிவரவுச் சட்டம் மாற்றப்பட்டது.
படகு மூலம் வருபவர்கள் குறித்த தனது கொள்கையை மாற்றி விட்டார் என்ற கருத்தை, Anthony Albanese ஏற்க மறுத்து விட்டார்.
“ஆஸ்திரேலியாவின் நலன்களுக்காக என்று, குறிப்பிட்ட சூழ் நிலைகளில், ஒரு வழக்கு குறித்த முடிவுகளில் – அவர்களுக்கு வீசா வழங்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் முடிவு கூற முடியும்,” என்று Anthony Albanese பிரிஸ்பேன் நகரில் கூறினார்.
“பீட்டர் டட்டனின் தொலைபேசி இலக்கம் கையில் இருந்ததால், குழந்தைகளைப் பராமரிப்பவரை அந்தக் குடும்பத்துடன் வாழ அனுமதிக்க முடியும் என்றால், ஒரு முழு பிராந்திய சமூகமே கோரும் போது, ஏன் அவர் அதை செய்ய முடியாது?”
கருத்து தெரிவிக்க