உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தரமற்ற பொலித்தீன் உற்பத்திகள் தொடர்பில் சுற்றிவளைப்பு நடவடிக்கை

தரமற்ற பொலித்தீன் உற்பத்திகள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பான சட்டதிட்டங்களை மேலும் அதிகரிக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் விசாரணை பணிப்பாளர் என்.எஸ்.கமகே தெரிவித்தார்.

2017 ம் ஆண்டு உணவு பொதிகளை செய்வதற்கான பொலித்தீன் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை நாடு முழுவதும் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைவாகவே சட்டத்தை மீறி செயற்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடங்கலாக 2 ஆயிரத்து 600 பேருக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புறக்கோட்டை பீப்பிலஸ் பார்க் வர்த்தக தொகுதி பகுதியில் உணவுப்பொதி சுற்றுவதற்கு பயன்படும் பொலித்தீன் ஒரு தொகை மீட்கப்பட்டது.

இவ்வாறு 300 கிலோகிராமுக்கும் அதிக எடை கொண்ட பொலித்தீன்கள் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் அதிகார சபையின் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறான பொலித்தீன் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் என்.எஸ்.கமகே குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க