உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வேட்புமனு கோரும் அறிவிப்பு செப்டம்பர் 20 இல்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் 20ஆம் திகதிக்கு பின்னர், வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும், ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கும் இடைப்பட்ட ஏதேனும் ஒரு நாளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும். என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நொவம்பர் 10ஆம் திகதியில் இருந்து டிசெம்பர் 8ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சிகளின் செயலாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஓகஸ்ட் 9ஆம் திகதி இடப்பட்டுள்ள  தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்தக் கடிதங்கள், கட்சியின் செயலாளர்களுக்கு, நேற்று மாலையே கிடைத்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமாயின், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்விப் ​பொதுத் தராதர சாதாரணத் தர தேர்வுகள் டிசெம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித், ​தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனால், நொவம்பர் 9ஆம்  திகதிக்கும் , டிசெம்பர் 2ஆம் திகதிக்கும்  இடைப்பட்ட காலத்திலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க