கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர் கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் இவர் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை சனிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.
இன்று மாலை சர்வ மதத் தலைவர்களை சந்தித்து பேராயர் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.
தமது விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றையும் பேராயர் நாட்டி வைப்பார்
.
கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் றஞ்சித் ஆண்டகையுடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் செல்லும் கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் காயப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்.
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் பேராயர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார்.
பேராயர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கவுள்ளார்.
[அரச தகவல் திணைக்களம்]
கருத்து தெரிவிக்க