உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைதீவில் கவனயீர்ப்பு பேரணி

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித ராஜப்பர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு நகர் வழியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பேரணியை மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு மாவட்ட செயலக வாயில் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் பொலிஸார் கொண்டுவரப்பட்ட நிலையில் தொடர்ந்து அந்த மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரை கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை குறித்த இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் குறித்த பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.

போராட்டத்தின் போது எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும், எமது மண்ணை ஆக்கிரமிப்பதை நிறுத்து, என்ற உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் சுமார் 300 வரையான மக்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க