மன்னார்-யாழ் பிரதான வீதி, இலுப்பைக்கடவை மற்றும் பரங்கியாறு பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் உரிய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதாக குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-யாழ் பிரதான வீதியில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் பரங்கியாறு பகுதியில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் மண் அகழ்வு இடம் பெற்று வந்த நிலையில் தற்போது அப்பகுதியில் மண் அகழ்வுசெய்ய முடியாத நிலையில் தற்போது ஆற்றங்கரை பகுதியில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம் பெற்று வருவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் மற்றும் தென் பகுதியைச் சேர்ந்த மண் வியாபாரிகள் உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த பகுதிகள் உள்ள ஆற்றங்கரைகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றமையினால் ஆற்றங்கரையில் உள்ள பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
குறிப்பாக மாவட்ட சுற்றுச் சூழல் திணைக்கள அதிகாரிகள் இவ்விடையத்தில் எவ்வித அக்கரையும் இன்றி நடந்து கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் உரிய அதிகாரிகள் நினைத்த படி அனுமதியை வழங்குவதாகவும், குறித்த பகுதியில் இருந்து நாள் ஒன்றிற்கு நூற்றுக்கணக்கான டிப்பர் மண் குறித்த பகுதியில் இருந்து அகழ்வு செய்து கொண்டு செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மண் அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் மண் அகழ்வு இரவு பகல் பாராது இடம் பெற்று வருகின்றது.
வியாபார நோக்குடன் சில அரசியல் வாதிகளும் தமது செல்வாக்கை பயண்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் அதிக ஆழத்திற்கு மண் அகழ்வு இடம் பெற்றமையினால் உப்பு நீர் வருவதாகவும்,இதனால் விவசாயிகள் பாதீப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுச்சூழல் பாதீப்படைந்து உள்ளதோடு,மாவட்டத்தின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துளள்னர்.
எனவே உரிய அதிகாரிகள் தலையிட்டு மன்னார்-யாழ் பிரதான வீதி, இலுப்பைக்கடவை மற்றும் பரங்கியாறு பகுதியில் இடம் பெற்று வருகின்ற சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க