கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது;
எனது தனிப்பட்ட விடயமாகவும், நல்லிணக்க விடயமாகவும் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன்.
இலங்கையின் அரசியல்களம் மற்றும் இந்திய, தமிழக விவகாரங்கள் குறித்து எங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்.
முக்கியமான அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி தேர்தல், நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு குறித்தும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
2015ஆம் ஆண்டு எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை இலங்கை சிறுபான்மை சமூகத்தின் விடயத்தில் எவ்வளவு தூரம் உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
பல விடயங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், முன்னைய அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகள் தற்போது நீங்கியுள்ளது.
அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொடுத்தல், புதிய சட்டவாக்கங்கள், அதிலே சிறுபான்மை சமூகங்களுக்கு அநியாயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற விடயங்களில் எங்கள் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு இயன்ற சில விடயங்களை செய்துள்ளது. இன்று முற்றுப்பெறாமல் இருக்கும் சர்ச்சைகள், விமர்சனங்கள் இல்லாமலும் இல்லை.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னணியில் அவசரகாலச் சட்டம் அவசியமாக தேவைப்பட்டது.
விசாரணையை துரிதப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை இனம்காண்பதற்கும் சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பயங்கரவாத தடை குறித்த விடயங்களிலும் அவசரகாலச் சட்டம் தேவையற்றது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் விவகாரம் போன்ற விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதேநேரம் அவசரகாலச் சட்டம் நீடித்தால் இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகின்றது.
இப்படியான விடயங்களை கருத்திற்கொண்டுதான் தேவைக்கதிகமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமல் அதனை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.
முன்னதாக சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் அலுவலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தலைமை நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தார்கள்.
இதில் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் நிஜாம்தீன், காயல் மகபூப், மாவட்ட தலைவர் ஜெய்லாபுதீன், ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி, ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க