உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

திருகோணமலை கொலை: சட்டமா அதிபரின் தீர்மானத்துக்கு வரவேற்பு

திருகோணமலை மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச்சபை வரவேற்றுள்ளது.

அத்தோடு விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இந்தக் கொலைகள் தொடர்பான நீதி கிடைக்கப்பெறுவதற்கும் முழுமையானதும், கண்டிப்பானதும், பயனுறுதி உடையதுமான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதேவேளை சாட்சிகள் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தற்போது வசிக்கின்ற நாடுகளிலிருந்து சட்ட உதவிகளைப் பெறவும் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

திருகோணமலையில் 2006 ஜனவரியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென தெரிவித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து சட்டமா அதிபரால் மீளவும் விசாரணை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க