உள்நாட்டு செய்திகள்புதியவை

மன்னார் ஐயனார் ஆலயத்தில் ஒடுக்கப்படும் மக்கள்!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட கோவில் குளம் நொங்கு வெட்டி ஐயனார் ஆலயத்தில் சமூக ரீதியாக தாம் புறக்கணிக்கப்படுவதாக சவரிகுளம் பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட சவரிகுளம் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் கையொப்பமிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸிற்கு இன்று செவ்வாய்க்கிழமை(6) அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மகஜரில்,

கோவில் குளம் நொங்கு வெட்டி ஐயனார் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக நடை முறையில் இருந்த வழமைகள் மாற்றப்பட்டு கடந்த வருடத்தில் இருந்து சவரிகுளம் பகுதியில் வசிக்கும் எம்மை சமூக ரீதியாக அடக்கி ஒடுக்க முற்படுகின்றனர்.

வருடாந்த பொங்கல் நிகழ்வு இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில் ‘பட்டோலை’ அங்கத்தவர்கள் மட்டுமே ஆலய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே பகுதியில் உள்ள எம்மை எவ்விதமான ஆலய வேலைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் தீர்மானித்துள்ளதாக நாம் அறிகின்றோம்.

எனவே கடந்த வருடமும் நேர்த்திக்காக காவடி எடுத்த எமக்கு பல்வேறு விதமான நெருக்கடி கொடுத்ததுடன் சாதிய ரீதியாக வகைப்படுத்தினார்கள்.

அன்னதான மடத்திலும் எம்மை உணவு பரிமாறக்கூடாது என எம்மை புறக்கணிக்கின்றனர்.

இவ்வாலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலயம் ஆகும். இவ்வாறான பொதுக் கோவிலில் ஒரு பிரிவினர் மட்டும் உரிமை கோருவது நியாயமா? உலக ஒழுங்கு பெரு வளர்ச்சி பெற்று விட்ட இந்த காலத்தில் சாதிய பாகுபாடு பார்ப்பது மிகப்பிற்போக்குத் தனமும், அடிப்படை மனித உரிமை மீறலும் ஆகும்.

ஆலயம் என்பது மனிதர்களுக்கு சொந்தமானது. அங்கே மனித நேயம் பின்பற்றா விட்டால் ஆத்மார்த்த இறையுணர்வு நிலையை தேட முடியுமா?

ஆகவே தயவு செய்து வகுப்பு வாதவகைப்படுத்தல் உடனடியாக நிறுத்தி கடந்த காலத்தைப் போல் நிலமையை வழமையாக்க வழிவகுக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தீர்வு எட்டா விட்டால் சத்தியாகிரகப் போராட்டம் நடாத்த உத்தேசித்துள்ளோம் என்பதையும் தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் அமைச்சர் மனோ கணேசள்,வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க