காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த நிலை தொடர்பில் ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது தொடர்பான பிரேரணை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், சர்வதேச பிரச்சினையில் (காஷ்மீர்) பாகிஸ்தானும் ஒரு தரப்பாகும், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு ஆலோசனை சபையின் தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது.
இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெற்றோ, பாகிஸ்தானின் ஒப்புதலை பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இது சட்டவிரோதமானது என கூறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வுகளை கூட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை காலை 11.00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க