உள்நாட்டு செய்திகள்புதியவை

பண மோசடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மகரகம வேலைவாய்ப்பு நிறுவனம் அருகில் ஆர்ப்பாட்டம் கனேடிய நாட்டு வேலைவாய்புகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து 74 பேரிடம் தலா 10 இலட்சம் ரூபாவினை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து பணத்தை இழந்தவர்கள் கடந்த 6 ஆம் திகதி மகரகம வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கனேடிய இலங்கை கூட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் ஒன்று காணப்படுவதாகவும் அதன்மூலம் அவர்களுக்கு கனேடிய நாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத் தர முடியும் எனக் கூறியே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வின் போது அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரும் கலந்து கொண்டதாகவும் அதனால் நிறுவனம் தொடர்பாக எமக்கு எந்தவொரு சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனம் தம்மிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் எனினும் இன்றுவரை எவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படவில்லை எனவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இது தொடர்பாக தாம் இரகசிய பொலிசார் மற்றும் மிரிகான விசேட புலனாய்வு பிரிவினருக்கும்
புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமது இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் சாகும்வரையான உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தாஜ் லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் எம்.பீ.எம்.எஸ்.பிரதீப் அவரகளிடம் வினவியபோது ஹோட்டல்; துறையில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக எம்மால் நடத்தப்பட்ட விசேட சேவை முகாமுக்கு பதிவு கட்டணமாக தலா 8885 ரூபா செலுத்தி வெளிநாடு செல்வதற்கான பதிவு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

2011 ஆம் ஆண்டு எனது தந்தையாரான எம்.வி.எச். பிரேமரத்னவின் தலையீட்டினால் கனேடிய நாட்டின் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. எம்மால் பண மோசடி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

விண்ணப்பதாரிகளால் பணம் செலுத்தப்பட்டது அவர்களுக்கு பயிற்சி வழங்கிய கீன் கொலேஜ் நிறுவனத்திற்கேயாகும் எனினும் அவர்களிடம் தலா 10 இலட்சம் ரூபா பெறப்படவில்லை 612000 ரூபா தொகை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 10 இளைஞர்கள் கனேடிய நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எஞ்சியோருக்கும் விசா அல்லது செலுத்தப்பட்ட பணத்தை திருப்பி வழங்குமாறு கோரி கீன் கொலேஜ் நிறுவனத்திற்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தாஜ் லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பீ.எம்.எஸ். பிரதீப் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க