மட்டக்களப்பின் தொன்மையான 99 வீதம் தமிழ் வாக்காளர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் மெளணிக்கப்பட்ட பின் அதாவது 2009இல் இருந்து இன்று வரை அநாதையான தொகுதியாகவே காணப்படுகிறது.
இங்கு தமிழருக்கான பிரதிநிதித்துவம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சரியான ஒருநபரை நியமிக்காமல் தமிழத் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் ஒழுங்கற்ற அரசியல் காரணமாக பட்டிருப்பு தொகுதியானது மாற்று சக்திகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக இப்பகுதியில் நீண்ட கால வரலாற்றை கொண்ட இராசமாணிக்கம் தமிழர் அரசியல் வரலாற்றிலிருந்து நீக்கி விட முடியாத ஒரு மகத்தான தலைவர்.
அதன் பின்னர் இப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்திய அனைவரும் மக்களுக்காக பாடுபட்டதற்கு அப்பால் அறிக்கை அரசியல் செய்து பட்டிருப்பை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இன்று வரை தமிழரசு கட்சிக்கென வாக்கு வங்கி உள்ள இந்த பகுதியில் வங்குரோத்து அரசியல் மேற்கொள்ளப்படுகின்றமையானது கவலையான விடயமாகும்.
இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகிய சிலரின் செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் மகிந்த ஆட்சியில் இருந்த போது அதில் முக்கிய பதவி வகித்ததாக இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன் மீது பொதுவான குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
ஒரு வருடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் தமிழரசு கட்சியில் இணைந்திருந்தார் சாணக்கியன்.
ஆனால் இவரை சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. அவர் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய பதவியொன்றை வகித்ததால் எந்த நேரத்திலும் அரசு பக்கம் தாவலாம் என மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் புரளியை கிளப்பிவிட்டனர்.
இதனையடுதது தமிழரசு கட்சியிலுள்ள ஏனையோரும் இந்த புரளிக்கு தாளம் போட்டு சாணக்கியனை நீக்க நடவடிக்கை எடுக்கும் படி அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாணக்கியன் தேவைதானா என்ற வினாவும், அவருக்கு எதிராக அரசியல் செய்ய யாரும் உள்ளனரா என கேள்வியும் எழலாம்.
ஆனால் இதற்கு மேற்படி மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.
சிங்கள சமூகத்துடன் கிட்டத்தட்ட இரண்டற கலந்து விட்ட வகையில் உள்ள முன்னாள் வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைக்க முடியும் எனில் சாணக்கியனை பட்டிருப்பு தொகுதியில் நிறுத்துவதில் என்ன தடை இருக்க முடியும்?
சாணக்கியன் முதன்முதலாக இலங்கைக்கு வந்து பாட்டனாரின் நிகழ்வில் கலந்து கொண்ட போது இராசமாணிக்கத்தின் குடும்பத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாணக்கியனை அரசியலுக்கு அனுப்பலாம் என சாணக்கியனின் தந்தையிடம் தெரிவித்தபோது சீசீ இப்போது என்ன தேவை உள்ளது 15 வருடங்களின் பின் வந்தால் போதும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இளையோரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் இவரை பயன்படுத்தலாமே என்பது பலரின் கருத்தாக உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது தராக்கி சிவராம் எழுதிய கட்டுரைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஏடான பழுகாமத்தை மையப்படுத்தி வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் கருணா சார்பாக கட்டுரை எழுதிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாணக்கியன் தொடர்பில் குற்றம் சுமத்த என்ன தகுதி இருக்கிறது.
இரண்டு தடவைக்கு மோலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அவர்கள் பட்டிருப்பு தொகுதிக்கு என்ன செய்தார்கள் என தேடினால் மிஞ்சுவது அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை மாத்திரமே.
தமிழ் மக்களை போலி தேசியம் கதைத்து அழிக்கும் நிலையை அவர்கள் உருவாக்குகின்றார்களா அல்லது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய தயாராகுகிறார்களா என்பது கேள்விக்குறியே.
சாணக்கியன், மகிந்தவுடன் இணைந்தது தவறெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்ற ஜனாதிபதி மைத்திரிக்காக, 2015இல் வாக்கு கேட்டு தமிழ் மக்களிடம் சென்றதை நிறுவல் ரீதியில் பார்த்தால் இரண்டும் ஒன்று தான்.
2009இற்கு பின் பட்டிருப்பு பெயரளவில் ஒரு தொகுதியாக உள்ளதே தவிர அங்கு தமிழ் மக்கள் சார்ந்தோ அல்லது அவர்களின் அபிவிருத்தி சார்ந்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்களின் அடையாளமாக உள்ள பட்டிருப்பு தொகுதியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் பழமைவாதிகளின் ஆலோசனைகளை ஆலோசனைகளாகவே நிறுத்தி விட்டு அதனை செயற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எனினும் பழமைவாதிகளின் ஆலோசனைகளை கேட்டு அப்படியே செயற்பட ஆரம்பித்தால் பட்டிருப்பு மீண்டும் ஒருமுறை மாற்று சக்திகளிடம் செல்வதை தடுக்க முடியாது.
அரசியல் இருப்பில் மக்களின் இருப்பை பயன்படுத்தி துடிப்புடன், நேர்மையாக, மக்களின் நலன் கருதி செயற்படும் இளம் சமுதாயத்தினரை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கருத்து தெரிவிக்க