ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பாக இரண்டு உயர் அரச அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செப்டம்பர் 3 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இன்று (ஜூலை 29) இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் உளவுத்துறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் காவல் துரைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மீது மொத்தம் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய விசாரணையின்போது, ஒரு மனுவை தாக்கல் செய்த சட்டத்தரணி சாலிய பீரிஸ், தாக்குதல்களுக்கு அரசியல் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவர் மூன்று பாதிரியார்களுக்காக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை மற்றொரு மனுதாரரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி லக்ஷன் டயஸ், தாக்குதல்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட தவறிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதிபதி குழு, செப்டம்பர் 3, 4, 5 ஆகிய திகதிகளில் குறித்த மனுக்கள் மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.
கருத்து தெரிவிக்க