“தோட்டத்தொழிலாளர்களுக்கு – பெருந்தோட்டங்களை பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும்.
இந்த கோரிக்கை உட்பட மலையக மக்களின் உரிமைசார் விடயங்களை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியை தளமாகக்கொண்டியங்கும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்றுமாலை (24) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியதாவது,
“இலங்கை அரசியலில் இனிவரும் நாட்கள் மிக முக்கியமானவை. தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் சிறுபான்மையினத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் தேசிய கட்சிகள், பேச்சுகளை நடத்த முற்படும். எனவே, நாம் வழிப்புடனும், மக்கள்சார் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் தயார் நிலையிலேயே இருக்கவேண்டும்.
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். உரிமை சார் கோரிக்கைகளும் இருக்கின்றன.
எனவே, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வேட்பாளருக்கே ஆதரவு என்ற விடயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனையக் கோரிக்கைகளை மழுங்கடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
மலையகம் என்றதுமே சம்பள பிரச்சினை மட்டும்தான் என்ற விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை நிலைமை அதுவல்ல.
தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய விடயங்களில் இந்த சம்பளப் பிரச்சினையும் ஒன்று. எனவே, நாம் தூரநோக்குடன் செயற்படவேண்டும்.
எனவே, கூட்டு ஒப்பந்தத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான சிறந்த மாற்று வழி என்ன என்பது சம்பந்தமாக ஆராய்ந்தோம்.
இதற்கமைய பெருந்தோட்டங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கே பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே சிறப்பான தேர்வு என கண்டறிந்தோம்.
இதை வெற்றிகரமாக செய்துமுடிக்கவேண்டும் என்பதுடன் தொழிலாளர்கள் நல்லநிலைமைக்கு வரும்வரையில் அரசாங்கம் கைகொடுக்கவேண்டும்.
காணியை பகிர்ந்தளிப்பதுடன் மட்டும் அரசாங்கத்தின் கடப்பாடு முடிந்துவிடாது.
அத்துடன், மலையகத் தமிழர்களும் தேசிய இனம்தான். அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எனவே, உரிமைகள்சார் கோரிக்கைளும் முன்வைக்கப்படும்.
இவற்றை நிறைவேற்றுவதற்கு எவர் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி கூடி முடிவெடுக்கும்.
இது தொடர்பில் மக்களுடனும் நாம் கலந்துரையாடுவோம். “ என்றார் வேலுகுமார் எம்.பி.
கருத்து தெரிவிக்க