உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராகக் சஜித் பிரேமதாஸ?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றிரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனாலும். இந்த முடிவு இறுதியும், உறுதியுமான முடிவாக அமையும் என அரசியல் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று மாலை அலரி மாளிகையில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியபோது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது எனத் தெரியவந்தது.

இதன்போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்னொரு பிரிவினரும் கருத்து வெளியிட்டனர் எனவும் அறியமுடிந்தது.

எவ்வாறாயினும் கடும் வாக்குவாதங்களின் பின்னர் எந்த முடிவுகளுமின்றி நேற்று மாலை கூட்டம் முடிவடைந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி தீர்மானிக்கும் வரை யாரும் இதைப் பற்றிப் பொதுவெளியில் பேசக் கூடாது எனக் கட்சியின் தலைவர் ரணில் இங்கு குறிப்பிட்டார் எனச் சொல்லப்படுகின்றது.

இந்தநிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றிரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.

கருத்து தெரிவிக்க