உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மலையக அபிவிருத்திக்கு தடையாக இருப்பது எது? வேலுகுமார் எம்.பி.

மலையக அபிவிருத்திக்கு தடையாக இருப்பது எது? வேலுகுமார் எம்.பி. என விளக்கமளித்துள்ளார்.

“கிடப்பில் போடப்பட்டிருந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு காணி உரிமம் வழங்கும் செயற்றிட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரான அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனே புத்துயிர் கொடுத்தார்.

எனினும், இவ்விடயத்திலும் பெயர்போட்டும்கொள்ளும் அரசியலை இன்று சிலர் வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றனர்.

இத்தகைய அரசியல் அணுகுமுறையே மலையக அபிவிருத்திக்கு பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளது.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று மாலை (20.07.2019) சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது,

“மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதும் எமது பிரதான இலக்காகும். இதன்காரணமாகவே அபிவிருத்திகளுக்கும், உரிமை அரசியலுக்கும் அதிக முக்கியத்தும் வழங்கிவருகின்றோம்.

எனவே, பெருந்தோட்டப்பகுதிகளில் யார் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் அதற்கு முழு ஆதரவையும் வழங்குவோம்.

யார் குத்தினால் என்ன அரிசி வந்தால் சரி என்பதுபோல், யார் செய்தால் என்ன – மக்களுக்கு சேவைகள் சென்றடைவதே பிரதான விடயமாகும்.

ஆனாலும் ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை அவரை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு அதற்கு மற்றுமொருவர் பெயர்போட முயற்சிப்பது அநாகரீக அரசியலின் உச்சகட்டமாகும்.

சமூகமாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கையில் இத்தகைய அரசியல் கலாசாரமும் மாற்றமடையவேண்டும்.

நான் என்ற மமதையானது அழிவையே தரும் என்கிறது வேதம். எனவே, வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் நான்தான் என்ற மமதை தலைக்கேறிவிட்டால்… அடுத்து என்னவென்பதை நான் கூறிதான் புரியவேண்டும் என்றில்லை.

பெருந்தோட்டப்பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர்வீதம் காணி வழங்கும் திட்டம் இன்று நேற்று அல்ல 92 காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

எனினும், மலையகத்துக்கான உரிய அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருந்ததால் அத்திட்டம் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட காலத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான ராதா கிருஷ்ணனே அத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார்.

கல்வி அமைச்சின் ஊடாக அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அவருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளோம்.

இதன்பலனாகவே இன்று பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு காணி உரிமம் கிடைக்கவுள்ளது.

இதற்கு தாங்கள்தான் நடவடிக்கை முன்னெடுத்தோம் என சிலர் உரிமை கொண்டாடிவருகின்றனர். ஆனால், அடித்தளமிட்டவரை மறந்துவிட்டனர்.

இப்படியான அரசியல் அணுகுமுறையாலேயே மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முடங்கியுள்ளன. நாம் நாகரீக அரசியலையே விரும்புகின்றோம். போட்டியிருக்கவேண்டும்.

அதிலும் நேர்வழியில் வெற்றிபெறவேண்டும். குறுக்கு வழியில் – மக்களை ஏமாற்றி முன்னேற நினைப்பதுகூட துரோகமாகவே கருதப்படும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

கருத்து தெரிவிக்க