அழகு / ஆரோக்கியம்

பூவரசில் உள்ள மருத்துவ குணங்கள்

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சாணத்தை கரைத்து வீட்டு வாசலில் தெளித்து கோலம் போட்டு , அதன் நடுவில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது அன்றைய காலத்தில் இருந்த வழக்கம் மட்டுமல்ல. மரபின் மருத்துவம் என்பதிலும் ஐயமில்லை. மேலும் பூவரச மரத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பூவரச மரம் நிறைந்து காணப்படுகிறது.

பூவரசின் இலை, பூ, காய், பட்டை, வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பூவரச மரத்தில் இருந்து இடியப்ப உரல் தயாரிக்கப்படுவதும் தெரிந்ததே. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவரச இலையை அரைத்து சொறி. சிரங்கு, தேமல், உடலில் ஏற்படும் நோய்கள் முதலியவற்றின் மேல் பற்றுப் போல் பூசி வந்தால் குணமடைந்து விடும்.

இதன் காயை அம்மியில் அரைத்து அல்லது கருங்கல்லில் தேய்த்து அதில் இருந்து வரும் மஞ்சள் நிற பாலை தேமல், படர்தாமரை போன்றவற்றுக்கு பூசினால் உடனடியாக குணமடையும். அத்துடன் கை, கால்களில் வீக்கங்கள் இருந்தால் அவற்றின் மீது பூசினாலும் குணமாகும்.

பூவரசம் பட்டையை நீர்விட்டு கொதிக்க வைத்து அதனை வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். மேலும் செதில் செதிலாக உதிரும் சொரியாசிஸ் நோய்க்கு பூவரசு மிகச் சிறந்த மருந்தாகும். நன்றாக முற்றிய மரத்தின் பட்டை, பூ , காய், மூன்றையும் காய வைத்து தூளாக்கி, காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள் இலகுவில் மாறாது. அதற்கு பூவரசம் பட்டையை அவித்து அதன் நீரால் கழுவி வந்தால் விரைவில் மாறி விடும்.

மேலும் ஞாபக மறதி நோய்க்கு சிறந்த மருந்து எனவும் சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

கருத்து தெரிவிக்க