உள்நாட்டு செய்திகள்புதியவை

மிருக பலி: மேல் நீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது.

யாழ் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விவாதம்,மற்றும் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று ஜூலை 18ஆம் திகதி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது.  அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்கி வந்தன.

இந்நிலையில்  அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்” எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க