தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்த பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,.
எமது உண்மையான சரித்திரம் வெளி வராமல் சுதந்திரத்தின் பின்னரான காலம் தொடக்கமே எமது சிங்கள புத்தி ஜீவிகள் பார்த்துக்கொண்டமை இன்று யோசித்துப் பார்த்தால் கூட அறுவருப்பை தருகின்றது.
எனவே தான் எமது வரலாற்றில் சம்பவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஆவண மயப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த 30 ஆண்டு போர் சூழல்களிலும்,இயுதி யுத்தத்தின் போதும் ஏற்பட்ட இழப்புக்கள் சிந்திக்க அல்லது மீட்டுப் பார்க்க முடியாத நிகழ்வுகளாக அமைந்தாலும் கூட அந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்காண போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.
இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.
எனவே எழுத்துத்துரை வளர்க்கப்பட வேண்டும்.தரமான படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.அப்போது தான் உண்மைகள் நடு நிலையில் இருந்து எழுத்துருவில் ஆராயப்படும்.
எம்மிடையே இன்றும் வாழும் எத்தனையோ இலக்கியப்படைப்பாளிகள் தமது படைப்புக்களை அச்சேற்றம் செய்வதற்கும், அவற்றை வினியோகம் செய்வதற்கும் தேவையான முதலீடுகள் அற்ற நிலையில் அமைதியாக இலை மறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட படைப்புக்களை இனம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும்,அவர்களின் படைப்புக்களை பிரசுரம் செய்வதற்கும் ஏதுவாக ஒரு புதிய வேலைத்திட்டம் வடமாகாண சபையினால் அறிமுகம் செய்யப்பட்டு அப்படைப்பாளிகளுக்கான கௌரவங்கள் மற்றும் சிறப்பு பரிசிலிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைப்பாளிகள் எமது காலத்தின் போது வடமாகாண சபையால் கௌரவப்படுத்தப்பட்டனர்.
அதே போன்றே சமாந்தர வேலைத்திட்மொன்று பிரதேச மட்டங்களில் உள்ள படைப்பாளிகளை அறிமுகம் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இயங்குகின்ற கலாச்சார பகுதியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருந்த போதும் இன்னும் பல கலைஞர்கள் இன்னமும் அடையாளப் படுத்தப்படாமல் இருக்கின்றார்கள்.தனிப்பட்ட காழ்ப்பணர்ச்சிகள்,வர்க்க ரீதியான சிந்தனைகள் போன்ற காரணங்களே அவர்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாம் இவ்வாறான குறுகிய சிந்தனைகளுள் இருந்து வெளியே வர வேண்டும்.நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற தாயக மொழிச் சிந்தனை மேலோங்க வேண்டும்.
அவ்வாறான சிந்தனை மேலோங்கினால் தான் எம்மை ஆள்வதற்கு தகமை உடையவர்கள் ஆவோம்.
தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.மீண்டும் கூறுகின்றேன் படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.
அவர்களின் தரமான படைப்புக்கள் மக்களிடையே உலா வர ஆவனம் செய்ய வேண்டும்.அந்த வகையிலே சர்மிலா வினோதினி அவர்களும் ஒரு சிறந்த படைப்பாளராக நீண்ட காலம் எம்மக்களிடையே உலா வர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள்,புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க