மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக உயிலங்குளம் நல்லாயன் கால்நடை உரிமையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பாக உயிலங்குளம் நல்லாயன் கால்நடை உரிமையாளர் ஒன்றிய உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இன்று திங்கட்கிழமை (15) மன்னார் பிரதேசச் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்..
உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளது.
முன்னைய காலங்களில் எமது மாவட்டத்தில் இறைச்சி, பால், மாட்டெரு போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எமது கால்நடை வளர்ப்பாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை யாவரும் அறிவோம்.
அதிகமான குடும்பங்கள் கால்நடையினை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களாக உள்ளது. கால்நடைகளின் இழப்பு குடும்பங்களிலே பாரிய துயரத்தையும் கஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஸ்டத்தின் காரணமாக சில பிள்ளைகள் பாடசாலைக்கு கூட செல்வதில்லை.காரணம் அன்றாடம் கிடைக்கின்ற பாலை விற்றுத்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.
கால் நடைகள் உயிரிழக்கின்றமை தொடர்பாக மிருக வைத்தியரை சந்தித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் இன்று வரை பல கால்நடைகள் உயிரிழந்து கொண்டு இருக்கின்றது.
சில கால்நடை உரிமையாளர்களுக்கு நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
பாதீக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு இது வரை எவ்வித நட்ட ஈடும் வழங்கப்படாமையினால் அவர்கள் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் பாதீக்கப்பட்டுள்ளனர்.
எனவே எமது கால் நடை உரிமையாளர்களுக்கு மதிப்பளித்து தமது அதிகார பிரதேசத்திற்கு உற்பட்ட கால்நடை உரிமையாளர்களாகிய எங்களது அவல நிலையை கருத்தில் கொண்டு அவலத்தில் இருந்து நாங்கள் மீள தங்களது மேலான அதிகாரத்தை பயண்படுத்தி தேவையான நட்ட ஈட்டை பெற்றுக் கொள்ளுவதற்கும், கால் நடைகளை நோயில் இருந்து காப்பாற்றுவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[ மன்னார் நிருபர் ]
கருத்து தெரிவிக்க