ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் இல்லாமல் செய்யும் சக்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள வாக்குப் பலம் இல்லாத சிலரும் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிக் கட்சிக்குள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல தலைவர்கள் உள்ளனர். அவர்களில் ரணில் விக்ரமசிங்க, கருஜயசூரிய மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் விசேடமானவர்கள்.
இவ்வாறானவர்கள் இருக்கும் போது வேறு ஒருவரைக் கொண்டுவர யாரும் முயற்சி செய்யத் தேவையில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் தனித்துவம், ஒற்றுமையை இல்லாமல் செய்ய யாருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரைக் கொண்டு வந்ததில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பெரும் பங்கு காணப்பட்டதாக தற்போதைய ஜனாதிபதியே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க