உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

கூட்டணியிடம் தொண்டா பாடம் கற்க வேண்டும்: வேலுகுமார்

“கூட்டணி அரசியல் என்றால் என்னவென்பதை ஆறுமுகன் தொண்டமானும் அவரின் பங்காளிகளும் தமிழ் முற்போக்கு கூட்டணியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘என்வழி தனிவழி’, ‘சிங்கம் சிங்களா தா வரும்’ என்றெல்லாம் வீராப்பு பேசியவர்களுக்கு இன்று திடீரென ‘கூட்டணி ஞானம்’ பிறந்துள்ளமையானது அச்சத்தின் உச்சகட்டமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“பல்வேறு விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியிலேயே மக்கள் நலன்கருதி இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியை உருவாக்கினோம்.

ஆனால் பத்தோடு பதினொன்றாக இந்த கூட்டணியும் காணாமல்போய்விடும் என்று சிலர் ஏளனமாக விமர்சித்து பேரின்பமடைந்தனர்.

இவ்வாறு சரமாரியாக விமர்சன கணைகளைத் தொடுத்தவர்களுக்கு செயற்பாடுகள் மூலமாகவே பதிலடிகொடுத்தோம். இன்று எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலைக்கண்டு சில கட்சிகள் விழிபிதுங்கி நிற்கின்றன.

குறுகிய காலப்பகுதிக்குள் வெற்றிக்கூட்டணியாக முற்போக்கு கூட்டணி வலம் வருவதால் அடுத்து என்ன என்பது புரியாமல் அக்கட்சிகள் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.

எனவேதான் கூட்டணி அரசியலின் முக்கியத்துவத்தை ஆறுமுகன் தொண்டமானும் அவரின் சகாக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்தே அரசியல் அநாதைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி கூட்டணி அமைப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க