சினிமா

ஜெயலலிதாவிற்காக பரதம் பயிலும் கங்கனா ரணாவத்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை முழு நீள திரைப்படமாக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இருப்பினும் இயக்குனர் ஏ. எல். விஜய்யே ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம்ரவியுடன் தாம்தூம் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். இருப்பினும்  தன்னுடைய முழுக் கவனத்தையும் பொலிவுட்டில் செலுத்தி வரும் இவர் தலைவி படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வர இருக்கிறார். ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா சரியான தேர்வு அல்ல என்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும்,  கங்கனா ஜெயலலிதாவாக நடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில் தன்னுடைய எடையைக் குறைப்பது தமிழ் உச்சரிப்புகளுக்கான வகுப்புக்களுக்கு செல்வது என மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா சிறுவயதிலிருந்தே பரத நாட்டியத்தினை முறையாக பயின்றிருந்தவர் என்பதால் அவரது வேடத்தினை பிரதிபலிக்க கங்கனாவும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளார். மேலும் ஜெயலலிதா தன்னுடைய சிறுவயதினை மைசூரில் கழித்திருந்ததால் அவருடைய சிறுவயது காட்சிகளை மைசூரில் படமாக்கவிருப்பதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பில் அவருடைய இளமைக்காலம் தொடங்கி அவர் சினிமாவில் அறிமுகமாவது வரையிலான காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதமளவில் படபிடிப்புக்கள் தொடங்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க