” குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லையெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும்.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் (10) தற்போது நடைபெற்றுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
” நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையே தற்போது நிலவுகின்றது. எனவே, மக்களுக்காக அரசியல் நடத்தும் கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும்.
அரசியல் கட்சிகளுடன் மூடிய அறைக்குள் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்துவதற்கு எமது கட்சி விரும்பவில்லை. இன்றும், நாளை மாலைவரையும் நேரம் இருக்கின்றது. எனவே, எதுவாக இருந்தாலும் சபைக்குள் பேசுவோம்.
குறிப்பாக இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தடவைகள் ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால், இன்று என்ன நடக்கின்றது? மக்களை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது. எனவே, இனிமேலும் எந்த அடிப்படையில் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும்?
மக்களுக்காகத்தான் அரசியல் நடத்தப்படுகின்றதெனில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கவேண்டும்.
அரசு தகுதியிழந்துவிட்டது
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தவறிவிட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்களின் பயங்கரவாத தாக்குதல் குறித்த பல எச்சரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தவறிவிட்டது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் குற்றத்தரப்பாகியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
அதன்படி, நாட்டின் அல்லது அதன் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கும் உரிமையினை அரசாங்கம் இழந்துவிட்டது.” என்றும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க