தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக புதிய அரசியல் கூட்டணி ஒன்றினை அமைப்பதற்காக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் புதிய கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இருதரப்பும் நேற்று நண்பல் இணக்கப்பாட்டிற்கு வந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பினையடுத்து இருதரப்பினரும் இணைந்து புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பினை விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் சி.வி. விக்கினேஸ்வரனிடமிருந்து இரு தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தரப்பிற்கு அதிர்ச்சிகரமாக தகவல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிய சில நிபந்தனைகளுக்கு தம்மால் உடன்பட முடியாதுள்ளதாகவும் எனவே கூட்டணி தொடர்பான பேச்சுக்களை முடித்துக்கொள்வதாகவும் நாளைய (இன்று) சந்திப்பினை நிறுத்துவதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இருதரப்பு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக செயற்பட்ட புலம்பெயர் தரப்புக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இரு தரப்பும் சில விடயங்களில் முரண்டுபிடிப்பதாகவும் இரு தரப்பிற்குமிடையில் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் இவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் விசனமடைந்துள்ளன.
கருத்து தெரிவிக்க