நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இயங்கிய இந்த விமான நிலையம் யுத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மிண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றமை இந்தக் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனுடாக சிறந்த உறவுப்பாலத்தை அமைக்க முடியும். இதற்குஅனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதே போன்று இந்த மக்களுக்கு தேவையான பல அபிவிருத்திப் பணிகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமையவே இந்த விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இவ்வாறு மக்களுக்கு தேவையான அபிவிருத்திப் பணிகள் ஒரு புறம் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த கால நிலைமைகளால் இங்கிருந்து இடம் பெயர்ந்து தொடர்ந்தும் அகதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றமை வேதனையாகவே உள்ளது.
ஆகவே கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற இந்த மக்களின் காணிகள் மீளவழங்கப்பட்டு அவர்களும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் காணிகள் வீடுகள் இல்லாமலும் மக்கள் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு காணிகளையும் வீடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமானது.
குறிப்பாக இந்த மக்களுக்கு எதிராக இருந்த கடந்த ஆட்சியை மாற்ற வேண்டுமென மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியிரந்தனர். அதனூடாக ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் தான்மக்களுடைய பல பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களுடைய தேவைகள் எதிர்பார்ப்புக்களையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றிவருகின்றது.
ஆனால் ஐனாதிபதி ஐமத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சியால் இவை தடைப்பட்டிருந்ததை மக்களும் நன்கு அறிவார்கள்.
ஆனாலும் அதனையெல்லாம் தாண்டி நாங்கள் மிண்டும் எம்மாலான சேவைகளை இந்த மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
அவ்வாறு அபிவிருத்தி செய்வது போன்று அரசியல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டும் இந்த மக்களுக்கு அவசியமானதாகும்.
எனவே இந்த நாட்டிற்கு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தேசியத் தலைவராக வர வேண்டும். அதற்கும் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என விஐயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க