உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

2009, குற்றங்களுக்கும் சட்டநடவடிக்கை அவசியம்-ராஜதந்திர தரப்பு

இலங்கையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட கைதுகள் தொடர்பில் ராஜதந்திர மட்டத்தின் கவனம் திரும்பியுள்ளது.

இலங்கையில் பொதுவாக குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இதில் 2009ஆம் ஆண்டு இறுதிப்போர் அதற்கு முன்னர் இடம்பெற்ற மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் இன்னும் சுமத்தப்படுகின்றன.

எனினும் அது தொடர்பில் இன்னமும் இலங்கை அரசாங்கம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இறுதிப்போரில் காணாமல் போனோர் விடயத்தில் கூட இன்னமும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பணிகள் முனைப்பு பெறவில்லை.

இந்தநிலையிலேயே 250 உயிர்களை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க தவறினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது புதிய சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றன.

இந்தநிலையில் இதே முனைப்பை சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேரா 2009ஆம் ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் விடயத்திலும் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ராஜதந்திர தரப்புக்கள் வெளியிட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கையை இலங்கையின் அரசாங்கம் எடுக்கும்போதே சர்வதேசம் எதிர்பார்க்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கு பதில் கிடைக்கும் என்றும் ராஜதந்திர தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே இது தொடர்பில் ராஜதந்திர தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளன.

கருத்து தெரிவிக்க