கிழக்கு செய்திகள்புதியவை

வீட்டு திட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாடு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு 7ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று எந்தவித வீட்டுத்திட்டத்திலும் உள்வாங்கப்படாத நிலையில் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள் குடியேறி சுமார் 10 வருடங்களை கடந்த நிலையில் இது வரை எவ்வித வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை எனவும், கிடைக்கின்ற வீட்டுத்திட்டங்கள் காரணம் இன்றி இடை நிறுத்தப்படுவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விடத்தல் தீவில் வசிக்கும் யாக்கோப்பிள்ளை மதுரநாயகம் என்பவரே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முகாமில் விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தில் மீள் குடியேறினோம்.

மகள் ஒருவர் யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். மனைவி மற்றும் திருமணமான மகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றோம்.

வீட்டுத்திட்டம் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு தரப்பினருக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தேன்.

நான் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளேன்.

இந்த நிலையில் இனி வரும் வீட்டுத்திட்டத்தில் வீட்டுத்திட்டம் தரப்படும் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தினால் உறுதி மொழி வழங்கப்பட்டது.

ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் எனது பெயர் இல்லை என முறைப்பாட்டை பதிவு செய்தவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க