” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் கடந்தே ஞானம் பிறந்துள்ளது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று மாலை (23) தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (23) முற்பகல் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.
” அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை நாம் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், இன்றுதான் ஜனாதிபதி உண்மை நிலைவரத்தை உணர்ந்துள்ளார்.
அரசியலமைப்பை மாற்றுவதாக இருந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும். அந்த பலம் ஜனாதிபதியிடம் இல்லை. எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்கள் பற்றி பேசுவதில் பயன் இல்லை.
எனவே, காலம் கடந்தேனும் ஜனாதிபதிக்கு பிறந்துள்ள ஞானத்தை எண்ணி மகிழ்ச்சி மட்டுமே அடையமுடியும்.” என்றும் மஹிந்த கூறினார்.
கருத்து தெரிவிக்க