விளையாட்டு செய்திகள்

தனி ஒருவராக போராடிய மேற்கிந்திய அணியின் பிராத்வெய்ட்

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் மென்ன்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்திய – நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கட் இழப்புக்கு 291 ஓட்டங்களை குவித்தது. இதன் படி மேற்கிந்திய அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் மேற்கிந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் பிராத்வெய்ட் இறுதி வரை போராடியது பலராலும் பேசப்படுகிறது.

அணியின் சார்பில், கிறிஸ் கெயில் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஷாய் ஹோப் 1(3) ஓட்டத்தில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரனும் ஒரு ஓட்டத்தில் வெளியேறினார்.

அடுத்ததாக கிறிஸ் கெயிலுடன், ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஓட்ட எண்ணிக்கை ஓரளவு உயர்ந்தது. எனினும் ஹெட்மயர் 54(45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் 87(84) ஓட்டங்களும் , அஸ்லே நர்ஸ் ஒரு ஓட்டத்தத்துடனும் இவின் லீவீஸ் ஓட்டம் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பிராத்வெய்ட்டுடன், கேமர் ரோச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரளவு ஓட்டம் சேர்த்திருந்த நிலையில் கேமர் ரோச் 14(31) ஓட்டங்களில் வெளியேறினார்.

இந்த நிலையில் பொறுப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வெய்ட் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஷெல்டன் கட்ரல் 15(25) ஓட்டங்களில் ஆட்டமிழக்க தனி ஒருவனாக போராடி பிரித்வெய்ட் தனது சதத்தை பதிவு செய்தார்.

இவர் 101(82) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவரது போராட்டத்தால் நேற்றைய போட்டியில் மேற்கிந்திய அணி 286 என்ற ஓட்டங்களை தொட்டது. 5 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. எனினும் பிராத்வெய்ட்டின் துணிச்சலான போராட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க