கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணைக்கு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பாக புலனாய்வு அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக 33 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அங்கு நடத்திய தாக்குதல்களில் 27 கைதிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
கைதிகளிடையே ஏற்பட்ட மோதலை தடுப்பதற்காகவே படையினர் உள்நுழைந்ததாக நியாயப்படுத்தல்கள் கூறப்பட்டாலும் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக சம்பவம் இடம்பெற்றபோது பாதுகாப்புச் செயலாளரான இருந்த கோட்டாபய ராஜபக்சவின் அனுசரணையுடன் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைகள் இடம்பெற்றபோது, தாக்குதலை வழிநடத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசேட படையணியின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியூமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்ஜன் லமாஹேவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரியான ஹிமதுவகே சுஜீவ சம்பத் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையிலேயே சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒன்றை அமைக்கும்படியான கோரிக்கை சட்டமா அதிபரினால் பிரதம நீதியரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் உள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 33 குற்றச்சாட்டுக்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தப் படுகொலையை நேரில்கண்ட ஒரேயொரு சாட்சியாளரான கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளரான சுதேஷ் நந்திமால், உச்சநீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க