ஈரான் மீது இராணுவ தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு அனுமதி அளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாக, அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க போவதில்லை என ஈரான் அறிவித்தது.
இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதிகளில் விமானங்கள், போர்க் கப்பல்கள், அணு ஆயுதங்களை குவித்திருக்கிறது அமெரிக்கா. அண்மையில் ஓமான் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் 2 தாக்கப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை தொடர்கிறது.
இவ்வாறிருக்க . அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை தங்கள் நாட்டின் வான் பரப்பில் அனுமதி இன்றி பறந்ததால் , ஈரான் இராணுவம் அதனைச் சுட்டு வீழ்த்தியது. தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்திய அமெரிக்கா. அந்த விமானம் ஈரான் வான் பரப்பில் பறக்கவில்லை என்றும், சர்வதேச கடற்பரப்பிற்கு மேலே பறந்ததாகவும் தெரிவித்தது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த ட்ரம்ப், இன்று அதிகாலை ஈரானுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் ஈரான் இராணுவ வீரர்களுக்கு அதிக சேதங்கள் விளைவிக்காத வகையில், தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்ததாகவும் , ஈரானின் ஏவுகணைகள் , கண்காணிப்பு ராடர்களை குறி வைத்து இராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அந்த செய்தித் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இராணுவ தாக்குதலுக்கு விமானங்களும் , கப்பல்களும் தயாரான நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென தாக்குதலை நடத்த வேண்டாம் என பின் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடைசி நேரத்தில் தாக்குதல் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் சரியாக குறிப்பிடப்படவில்லை .
கருத்து தெரிவிக்க