உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கண்கட்டி வித்தை நடாத்தி வருகின்றனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரங்களிலும் தாமாகவே ஒவ்வொன்றைக் கூறி மக்களை ஏமாற்றும் வகையில் கண்கட்டி வித்தை நடாத்தி மக்களை ஏமாற்றி வருவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை அமைச்சருமான அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது.

அதே நேரம் பிரதமராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களாக அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இருக்கின்றனர். ஆக இந்த அரசிற்கு முண்டு கொடுத்து காப்பாற்றி வருவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பினர் பேசாமல் ஊடகங்கள் முன்னிலையில் தற்போது பேசுகின்றனர்.

அவ்வாறாயின் எதுவுமே செய்யாத அரசிற்கு ஏன் ஆதரவை வழங்கி வருகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

ஏனெனில் மிக முக்கியமாக இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய இலக்கை அடைந்தே தீருவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார்.

அதே நேரத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு வராது என்றும் அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறுகின்றார். மேலும் படுக்கை அறைவரை ஆக்கிரமிப்பு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்திருக்கின்றார்.

ஆக மொத்தத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி தமது எண்ணங்களின்பிரகாரம் ஊடகங்களுக்கு கருத்தக்களை வெளியிட்டிருக்கின்றனர்.

உண்மையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையாக இருக்கட்டும், நில ஆக்கிரமிப்பாக இருக்கட்டும் இத்தகைய பிரச்சனைகள் எல்லாத்தையும் தீர்த்து வைப்போம் என்று கூறிய இதே பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது வெவ்வேறு கருத்துக்களைக் கூறத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தது தாமே என்றும் அரசுடன் இதயங்களால் இணைந்துள்ளோம் என்றும் இந்த அரசிற்கு முண்டு கொடுத்து வருகின்றோம் என்றும் வெளிப்படையாக கூறிய வந்த கூட்டமைப்பினர் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்விற்கு உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் வெறுமனே அரசைப் பாதுகாத்து வருகின்றதை செயற்பாட்டை தான் செய்து வருகின்றனர்.

இதே வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமும் சரி அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து பேசவேண்டிய கூட்டமைப்பும் சரி இந்த விடயத்தில் அக்கறையற்ற போக்குடனேயே செயற்படுகின்றனர்.

உண்மையில் இந்தப் பிரச்சனை பாரதூரமான பிரச்சனை அல்ல. இதனைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாததாலேயே தற்போது அந்தப் பிரதேசத்தில் இனமுரண்பாடு ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இப்பொது அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரைவைப்பத்திரம் ஊடாக இதனைச் செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் பலவற்றைச் செய்வதாக பல சந்தர்ப்பங்களிலும் பல்வெறு வாக்குறுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருக்கின்ற போதும் உண்மையில் அவை எவையும் நிறைவேற்றப்படாத நிலையே இருக்கின்றது. ஆகவே இனியும் பிரதமரை அல்லது அமைச்சர்களை வெறுமனே நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

ஆகையினால் அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்தங்களைக் கொடுத்து அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் எடுப்பதுடன் தமிழ் மக்களது நலன்களுக்காக இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்து தெரிவிக்க