மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை இன்று சந்திக்க சென்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 95பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வழக்குகள் கடந்த காலங்களில் ஆமை வேகத்திலேயே இடம்பெற்றது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அரச சட்டத்தரணிகளின் பிரசன்னம் முறையாக இன்றி வழக்குகளை விரைந்து நடத்துவதில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறைக்கூடத்திற்கு பாவனைக்கான நீரைப்பெற்றுக்கொள்ள குழாய் கிணறு ஒன்றை அமைத்து தருமாறும் கைதிகள் கோரியுள்ளனர்.
இதேநேரம் சிறைச்சாலை வைத்தியசாலையை விடவும் போதனா வைத்தியசாலைக்குச் செல்வதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி பெறுவதிலும் தாமதமான நிலை நீடிப்பதாக அறியக்கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க