21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை தான் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
” கபீர் ஹாசீம், ஹலீம் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர்கள். அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டாம் என இவர்கள் இருவரிடமும் ஐ.தே.க. தலைவரும், சக உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், நாட்டினதும், சமூகத்தினதும் நலனைக்கருதி அவர்கள் பதவி துறக்கும் முடிவை எடுத்தனர். அந்த தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.
எனவே, மகாநாயக்க தேரர்களினதும், மக்களினதும் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றாலும் அது சர்ச்சைக்குரிய விடயமாக அமையாது.
அதேவேளை, மூன்று தடவைகள் அமைச்சுப் பதவிகளை துறந்தவன் நான். எனக்கு அமைச்சுப் பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வல்லமை இருக்கின்றது. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை பதவியேற்ககூடாது என்பதுதான் எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.” என்றார்.
கருத்து தெரிவிக்க