உள்நாட்டு செய்திகள்புதியவை

வலுக்கும் அரசியல் நெருக்கடி -பிரதமர் அவசரக் கூட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியகையோடு ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

சிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூருக்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிகிச்சைகளின் பின்னர்  நாளை மாலை நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரே மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும், வெளி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டாத பட்சத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் ,  அரசியலமைப்பை மீறும் வகையிலான ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பன உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, இராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்தவர்களை ஜனாதிபதி பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளமை அரசியலமைப்பை மீறும் செயல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக விமர்சித்து, அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளமை இதுவே கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் சந்தர்ப்பமாக பார்க்கப்படுகின்றது.  அத்துடன், இருவருக்குமிடையிலான மோதலின் உச்சகட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அவரச கூட்டமொன்று நடைபெறவுள்ளமையானது முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தங்கியிருந்து ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கும் பட்சத்தில், சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியல்ல தலைமையில் இக்கூட்டத்தை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க