யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகம் நேற்று “உலக ஈருருளி நாளை” முன்னிட்டு, மகாத்மா காந்தியின் தன்நிறைவு கொள்கையை நினைவூட்டும் வகையில் “காந்தி ஈருருளி பேரணி” ஒன்றினை நடாத்தியது.
முற்பகல் 9.30 மணிக்கு அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் மலர்மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து பேரணி மாண்புமிகு வடமகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தினால் துவக்கி வைக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காந்தியக் கொள்கையைப் பின்பற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுக்க யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் உள்ள காந்தி திருவுருவச் சிலையை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து கார்கில்ஸ் சதுக்கத்தில் உள்ள காந்தி திருவுருவச் சிலைக்கு இந்தியத் துணைத் தூதுவர்,அனைத்து இலங்கை காந்தி சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சிவகரன், சர்வோதயம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஸ்ரீயுகேந்திரா போன்றோரால் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனைத்து காந்தீய தொண்டர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தூதரகத்தில் இசை பயிலும் மாணவர்களால் மகாத்மா காந்திக்கு பிடித்த பாடல்கள் இசைக்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க