ஆப்கானிஸ்தானில் ஆறு இலட்சம் சிறுவர்கள் ஊட்டச்சத்தின்மை காரணமாக மரணிக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக மாற்றுவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவ்வமைப்பு, இந்த வாரம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காத பட்சத்தில் சிறுவர்கள் ஒவ்வொருவரும் மரணிப்பதை தவிர்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானில் சுமார் 2 மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு இலட்சம் பேர் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் கிறிஸ்டோப் பௌலார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உணவுத் தேவை மாத்திரமன்று மருத்துவத் தேவைகளும் உள்ளன. இது குறித்து யுனிசெப் அமைப்பு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் சூடான், யேமன் போன்ற நாடுகளிலும் இதேபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு தசாப்தங்களாக உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது அமைப்பினால் பெரும் சவால்களுக்கு மத்தியில் இயன்றவரை 34 மாகாணங்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுத்து வருகிறோம். 2018 ஆம் ஆண்டு மாத்திரம் இரண்டு இலட்சத்து 89ஆயிரம் பொதுமக்கள் உள்நாட்டு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் 3.8 மில்லியன் சிறுவர்களுக்கு பாதுகாப்பும் உதவியும் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க