வெளிநாட்டு செய்திகள்

உண்மையான கொரோனா நிலவரத்தை மூடி மறைத்த ஈரான்!

 

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை ஈரான் மூடி மறைத்தமை கண்டறியப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் அரசாங்கம் வெளியிட்ட எண்ணிக்கையை விட மும்மடங்கானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஈரானில் ஜுலை மாதம் 20 ஆம் திகதி வரை 14 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

எனினும் ஈரானில் கொரோனா தொற்றினால் ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் தொற்று எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 827 ஆக பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் உண்மையான எண்ணிக்கையும் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 24 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைய வாரங்களாக ஈரானில் இரண்டாம் கட்டமாக வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், மத்திய கிழக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் பதிவாகியுள்ளது.

ஈரானின் உத்தியோகபூர்வ தகவலின் படி முதலாவது கொரோனா மரணம் பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதியே முதலாவது மரணம் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஈரானின் கொரோனா தொற்று தொடர்பான உத்தியோகபூர்வ எண்ணிக்கை குறித்து கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க