உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடையடைப்பு அவசியமில்லை-எழுக தமிழ் பேரணியை புறக்கணிக்கும் வர்த்தக சங்கம்!

வவுனியா மக்களிற்கு துரோகம் செய்தவரின் இணைத்தலைமையில் நடைபெறும் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் நலன்புரிசங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு கர்த்தால் அனுஸ்டிக்குமாறு விடுக்கபட்ட கோரிக்கை தொடர்பாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த அறிக்கையில் மேலும்  தெரிவிக்க பட்டுள்ளதாவது…..
எழுக தமிழ் நிகழ்வு சிறப்புடன் நடைபெற  வாழ்த்துகின்றோம். ஆனால் எழுகதமிழ் நிகழ்வை முன்னிறுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செயற்படவேண்டும்.
யாழ்நகரில் நடைபெறவுள்ள பேரணிக்காக வடக்குகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வர்தகநிலையங்களையும் பூட்டுமாறு கோரிக்கை விடுவது சரியாகபடவில்லை.
எமது வர்தகர்கள் பலவழிகளில், பலசிரமங்களை எதிர்நோக்கியவண்ணமுள்ளனர்.
பொருளாதார ரீதியாகவும், தொழில்ரீதியாகவும் வர்தக நிலையங்களிற்கு ஏற்படும் பாதிப்புகளை யாரும் புரிந்துகொள்வதில்லை.
கடையடைப்பு செய்வதால் விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிரமப்படவேண்டிய நிலை ஏற்படும்.
எழுக தமிழ் நிகழ்விற்கு அனைத்து மக்களும் உணர்வுடன் வருகைதந்து கலந்துகொள்ளுமாறு கோருவது நியாயமானது.
ஆனால் கடையடைப்பு செய்யுமாறு கோருவது முறையற்றது. ஏற்கனவே இரண்டு எழுகதமிழ் நிகழ்வுகள் நடைபெற்ற போது கடையடைப்போ, கர்தாலோ அனுஸ்டிக்கபடவில்லை என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
அனைத்து தமிழ்  அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படாமல் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள் தமது அரசியலை வளர்க்க பொதுமக்களை பயன்படுத்துவதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரையில் பொருளாதார மத்தியநிலையத்தை  வவுனியா மக்களின் விருப்பங்களையும், கருத்துக்களையும் செவிமடுக்காமல் தனது தனிப்பட்ட விருப்பப்படி பொருத்தமற்ற விதத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அமைத்தமையானது வவுனியா மக்களிற்கு செய்த பெரிய துரோகமாகும்.
இது போலவே புதிய பேருந்து நிலைய மாற்றம் தொடர்பில் வுனியா மக்களினதும், வர்தகர்களினதும் நலன்களை கருத்தில்கொள்ளாமல்  சர்வாதிகார போக்குடன் செயற்பட்டமையானது வவுனியா மக்களிற்கு செய்த மிகப்பெரிய பாதிப்பான செயற்பாடாகும்.
ஆகையால் அவரது இணைத்தலைமையுடன் நடைபெறும்  செயற்பாட்டிற்கு எம்மால் ஒத்துழைப்பு  வழங்கமுடியவில்லை.
யுத்தம்  நடைபெற்ற காலங்களிலும், மற்றயகாலங்களிலும்  அனைவரது வேண்டுகோள்களின் பிரகாரம் கர்த்தால், கதவடைப்பு கோரிக்கைகளிற்கு வவுனியா வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்புகளையும் ஆதரவினையும் வழங்கிவந்திருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்.
ஆகையால் தற்போது நடைபெறும் எழுக தமிழ் நிகழ்விற்கு கடையடைப்புசெய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க