ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் என்று முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கேப்டன் பதவியை இழந்ததோடு ஓராண்டு தடையை அனுபவித்தார்.
தடை காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் அணிக்கு திரும்பினார்.
மேலும் ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.
இதன்படிபார்த்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தான் அவரால் மீண்டும் கேப்டன் ஆக முடியும்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்.
பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் அவருக்கும், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டபோது நானும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் தான் இருந்தேன்.
தடை காலத்தில் அவர் கடுமையான பாடம் கற்றுக்கொண்டு இருப்பார். அதனால் அடுத்த முறை அவர் சிறந்த கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் இருக்கிறார்.
அவரது பதவி காலம் முடிந்த பிறகே இது பற்றி சிந்திக்க விரும்புகிறேன். அது அடுத்த 6 மாதத்திலேயோ 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்தோ கூட இருக்கலாம். ஆனால் சுமித் மீண்டும் அணியை வழிநடத்த தகுதியானவராக இருப்பார்’ என்றார்.
தற்போதைய ஆஷஸ் தொடரில் 30 வயதான சுமித் இரட்டைசதம் உள்பட 671 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க