“ மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது பெற்றுக்கொடுத்துவருகின்றது.
எனவே, மலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்.
’’ என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நாவலப்பிட்டியவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் (12.09.2019) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு..,
“தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட எமது மலையகத் தமிழர்கள் அன்று அடக்கி ஆளப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை சலுகைகளை, உரிமைகளைக்கூட வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை.
தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் இன்மையால் எமது மூதாதையர்கள் அடிமைகளாக வழிநடத்தப்பட்டனர்.
இந்நிலையில் மலையக தொழிற்சங்க தந்தையான நடேசய்யர் உட்பட மேலும் சிலரின் முயற்சியால் தொழிற்சங்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு சற்றேனும் சுதந்திரத்தை அனுபவிக்ககூடியதாக இருந்தது.
எனினும், நாட்டை ஆண்ட அரசாங்கங்களும் மலையக மக்களுக்கு எதிராக துரோகங்களையே கட்டவிழ்த்துவிட்டன.
குடியுரிமை பறிக்கப்பட்டதுடன், ஒப்பந்தங்கள் மூலம் எம் உறவுகளை எம்மிலிருந்து பிரித்தெடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்தனர். இப்படிபல விடயங்களை குறிப்பிடலாம்.
இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் அயராத முயற்சியாலேயே பிரஜாவுரிமை கிடைத்தது என இன்றளவிலும் ஒரு தரப்பினர் பிரசாரம் முன்னெடுத்துவருகின்றனர்.
எமது மக்களுக்கு குடியுரிமை கிடைத்தகையோடு போராடியேனும் நிலவுரிமை, வீட்டுரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, சம்பள உரிமை உட்பட மேலும் பல உரிமைகளை பெற்றிருக்கவேண்டும்.
ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை அன்றிருந்த தலைவர்கள் வழங்கினார்களா? இல்லை என்பதாலேயே முக்கிய பல தலைவர்கள் தனிவழி பயணத்தை ஆரம்பித்தனர்.
குடியுரிமை கிடைத்துவிட்டது, அதை வாங்கிக்கொடுத்தது நாம்தான் எனக்கூவி கூவியே வாக்குவேட்டை நடத்தினர்.
அதுமட்டுமல்ல மலையகத் தமிழர்களை வாக்களிப்பு இயந்திரமாக பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் முயற்சிக்கும் துணைபோனார்கள்.
குடியுரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கியவர்கள் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் பல்வேறு உரிமைகளை முன்பே பெற்றிருக்கலாம். ஆனால், அமைச்சுப் பதவிகள் மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது.
நிலவுரிமை, வீட்டுரிமை ஆகியவற்றை பெற்றுக்கொடுத்துள்ளோம். லயன் யுகத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். வெகுவிரைவில் அதனை வெற்றிகரமாக செய்துமுடிப்போம்.
அத்துடன், அரசாங்க நிதியை தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டோம்.
மலையகத்துக்கென தனியானதொரு அதிகார சபையையும் உருவாக்கியுள்ளோம்.
இப்படி எமது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு சிலர் இன்னும் தாத்தா சுட்ட வடையையே சுட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இனியும் மக்கள் மத்தியில் பலைய பல்லவி எடுபடாது. ஏனெனில் முடியும் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த நான்கரை வருடகாலப்பகுதியில் செய்கைமூலம் உறுதிப்படுத்தவிட்டது” என்றார்.
கருத்து தெரிவிக்க