உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ஜனாதிபதி தேர்தலுக்கான பயிற்சி ஆட்டம்’! வெற்றி யாருக்கு?

எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியால் வெளியிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

2018 இல் உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக வேட்பு மனு
கோரப்பட்டவேளை எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியும் போட்டியிட முன்வந்தது.

எனினும், அக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் 2018 பெப்ரவரியில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையிலே இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது. இதன்படியே ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நவம்பர் நடுப்பகுதி அல்லது டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவானது நாட்டு மக்களின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, பிரதான ஆட்டத்துக்கான பயிற்சி ஆட்டமாக – ஒத்திகையாகவே இந்த தேர்தலை பிரதான அரசியல் கட்சிகள் கருதி, அதில் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கும்.

2011 இல் நடைபெற்ற காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆயிரத்து 954 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.

10 ஆயிரத்து 427 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியது.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறி மஹிந்த அணி தனிக்கட்சியை துவங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க