உள்நாட்டு செய்திகள்

‘கை’, ‘மொட்டு’ கூட்டணி சாத்தியமா? களமிறங்குகிறார் பஸில்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுக்கள் நாளை (27) நடைபெறவுள்ளது.

பரந்துப்பட்ட கூட்டணி அமைத்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன  முன்னணிக்கும் இடையில் இதுவரையில் ஆறு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவடைந்த பேச்சுக்களில் இரு தரப்பின் கொள்கைத் திட்டங்களும் ஒருமுகப்படுத்தி கட்சி யாப்பு உருவாக்கும் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பரந்துப்பட்ட கூட்டணி குறித்த பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச என்று கடந்த 11ஆம் திகதி அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்து வேட்பாளரை அறிவித்துள்ளமையால் பரந்துபட்ட கூட்டணி குறித்த பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது பயனற்றது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே  ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்றும் இரு மாறுப்பட்ட  கருத்துக்கள் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ளன.

எதிர்வரும் 3ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் பரந்துப்பட்ட கூட்டணி விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாளை  இரு கட்சிகளும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளன.

இச்சந்திப்பில் பஸில் ராஜபக்சவும் கலந்துகொள்ளவுள்ளார்.

கருத்து தெரிவிக்க