யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பை வேடிக்கை பார்த்த இராணுவத்தினர், அதனை ஒளிப்படம் பிடித்தவரை அழைத்துச் சென்று அச்சுறுத்திவிட்டு விடுவித்தனர்.
அத்துடன், அவரது அலைபேசி பறிக்கப்பட்டு அதிலிருந்த ஒளிப்படங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு இன்றுவரை நீடித்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
இந்த மோதலை தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்த பொதுமகன் ஒருவரை சிங்கள மாணவர்கள் சிலர் அவதானித்து இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பொது மகனை சிறிது தூரம் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியதுடன் அலைபேசியைப் பறித்தெடுத்து ஒளிப்படங்கள் அனைத்தையும் அழித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கு கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் இடம்பெற்றதால், அதில் தலையீடு செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியது.
எனினும் சம்பவம் இடம்பெற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கருத்து தெரிவிக்க