உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாடு திரும்பிய கையோடு அதிரடி காட்டவுள்ள மைத்திரி!

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள இயலுமை தொடர்பில் கேட்டறிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

கம்போடியா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு இதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா? என வினவும் ஜனாதிபதியின் கடிதம் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தொடர்பான, முழுமையான அறிக்கையின் சட்டரீதியான அணுகுமுறைகள், மாகாண சபை தேர்தல்களை நடாத்த ஜனாதிபதிக்கு இயலுமை உண்டா? என்பன உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்றத்தின் விளக்கத்தை ஜனாதிபதி கோரவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என, அண்மையில் நடைப்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தார்.

இதேவேளை, மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமல், அதனை வர்த்தமானியில் அறிவித்து, சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சாதகமான பதில் வரும் பட்சத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க